எரி சாராய ஆலையை கண்டித்து உண்ணாவிரதம்
பவானி: எரி சாராய ஆலை கழிவால், பாதிப்பு ஏற்படுவதாக கூறி, மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே சின்னபுலியூரில், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான எரி சாராய ஆலை, 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆலைக்குள் தேக்கி வைத்துள்ள கழிவு நீரால் துர்நாற்றம் எழுகிறது. இதனால் சின்னபுலியூர், பெரியபுலியூர், வைரமங்கலம், எவலமலை பஞ்சாயத்துகளில் கடும் பாதிப்பு ஏற்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது ஆலை நிர்வாகம், கொதிகலன் மூலமாக, காற்று மாசை தடுக்க, நிலைமின் வீழ்படிவாக்கி அமைத்தனர். இந்த கருவி நிறுவப்பட்ட பின், புகை போக்கியை உயரமாக அமைத்துள்ளது. இதனால் வெளியேறும் புகையில், சாம்பல் துகளுடன் துர்நாற்றம் ஏற்படுவதாக, மற்றொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.