தீவன பெருக்க திட்டத்தில் மானியம் பெற யோசனை
ஈரோடு, அக். 20-ஈரோடு மாவட்டத்தில் மாடுகளில் பால் உற்பத்தி, இனப்பெருக்கம், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க நடப்பாண்டில் தீவன பெருக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மானியத்துடன் கூடிய 'தீவன பெருக்க திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.கால்நடை விவசாயிகள், நீர் பாசன வசதி கொண்ட தங்கள் நிலத்தில், 3:1 என்ற விகிதத்தில், பசுந்தீவனங்களை வளர்க்க, இறவையில், 25 சென்டுக்கு, கோ(எப்.எஸ்)29 பயிர் விதைகள், 375 கிராம், வேலி மசால் விதை, 500 கிராம் வழங்கப்படும். இப்பயிர்களுக்கு உரமும் வழங்கப்படும். களையெழுத்தல், உரமிடுதல், நீர் பாசனத்துக்கு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு, 120 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது.மானாவாரி நிலம் கொண்ட கால்நடை விவசாயிகளுக்கு, 0.5 ஏக்கருக்கு மானாவாரி தீவனச்சோளம் கோ (எப்.எஸ்.)27 விதைகள், 6 கிலோ, தட்டை பயிறு விதை, 2 கிலோ வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், 150 ஏக்கர் தேர்வு செய்யப்பட உள்ளது. கால்நடை தீவனம் வழங்கும் முறையில், பண்ணை செயல்பாட்டை எளிமையாக்க, 200 தீவனப்புல் வெட்டும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். தங்கள் பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, தங்கள் பெயரை பதிவு செய்யலாம். பதிவு செய்தோருக்கு முன்னுரிமைப்படி, மானியம் வழங்கப்படும்.