தனி நபர், குழு கடன் பெற யோசனை
ஈரோடு:பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள், குழுக்கள் தங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்காக சாத்தியக்கூறுகள், சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய தனி நபர் கடன், குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்குகிறது.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடன் தரப்படும். 18 முதல், 60 வயதுக்கு உட்பட்டவர்கள், தனி நபர் திட்டத்தில் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம், அதனை சார்ந்த தொழில்கள், கைவினை பொருட்கள், மரபு வழி சார் தொழில்கள் செய்ய, 25 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.இதுபோல குழுக்கடன், சிறு தொழில், வணிகம் போன்றவைகளுக்கு, 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம் என அமைப்புகளில் உள்ளோரும் கடன் பெறலாம்.கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகம், 4 வது தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.