ஈரோடு, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், ஜாக்டோ - ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், மதியழகன், வீராகார்த்திக், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.கடந்த, 2021 சட்டசபை தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். சி.பி.எஸ்., திட்டத்தில் பணி செய்த அரசு ஊழியர், ஆசிரியர்கள், 50,000 பேருக்கு மேல் ஓய்வு பெற்றும், ஒரு ரூபாய் கூட பென்ஷன் இல்லாமல் உள்ளனர்.ஆதரவற்ற முதியோருக்கு அரசு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. அவருக்கு கையெழுத்திடும் தாசில்தாருக்கே பென்ஷன் இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும்.வேலை பளுவை குறைக்க காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, தொகுப்பூதியம், மதிப்பூதிய பணிகளை அகற்றிவிட்டு, நிரந்தர பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலியாகும் பணியிடங்களை அகற்றுவதை விட்டுவிட்டு, புதிய நபர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.* பவானியில் தாலுகா அலுவலகம் முன், ஈரோடு மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.* கோபி தாலுகா அலுவலகம் முன், கதிரவன் தலைமையில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஜோதி மணவாளன் நன்றி கூறினார்.* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாசில்தார் அலுவலகம் முன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.* தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் பங்கேற்றனர்.