காளிங்கராயன் வாய்க்காலில் 20ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு?
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், 15,764 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 16ம் தேதி முதல் ஏப்., 30 வரை தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் பவானிசாகர் அணையில் போதிய தண்ணீர் இல்லாதது, வாய்க்காலில் நவீன பராமரிப்பு பணி நடந்து வருவதாகவும் கூறி தண்ணீர் திறக்கவில்லை. அதேசமயம் உயிர் நீராக, ஜூலை, 14 முதல், 28ம் தேதி வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்தனர்.தண்ணீர் திறக்காததால் பாசனப்பகுதியில் தென்னை, வாழை, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, நெல், மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பதால் நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். கோரினர். தண்ணீர் திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், காளிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை எண்-4 தலைவர் பழனிகுமார் வழக்கும் தொடுத்தார். இந்த வழக்கில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வராத நிலையில், ஈரோடு நீர் வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில், பழனிகுமார் தலைமையிலான விவசாயிகள், நேற்று தண்ணீர் திறக்க வலியுறுத்தி முறையிட்டனர். பின் பழனிகுமார் கூறுகையில், 'வாய்க்காலில் வரும், 20ம் தேதி முதல் ஏப்.,5 வரை தினமும், 500 கன அடி திறக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், விரைவில் இதற்கான அரசாணை வெளிவரும் என்றும் உறுதி அளித்துள்ளனர்' என்றார்.