கலக்கத்தில் கள்ளிப்பட்டி அரசுப்பள்ளி மழலையர்
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி, சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில், அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது.பள்ளியில் கழிப்பறை மற்றும் சுற்றுசுவர் சேதமானதால், இடித்துவிட்டு புது கழிப்பிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. ஆனால் அதே இடத்தில் நிழற்கூடம் அமைக்கவும் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.இதனால் சர்ச்சையாக கடந்த அக்.,17ல் பள்ளிக்கு அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் சென்றார். அவரிடம் ஒரு தரப்பினர் கழிப்பறை அமைக்கவும், மற்றொரு தரப்பினர் கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டவும் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கழிப்பறை கட்டும் பணி நின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணியும் தொடங்கவில்லை. கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட, பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒருசிலரின் தவறான எண்ணத்தால், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி முடங்கியுள்ளது. பிரதான சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளது.கழிப்பறை வசதி இல்லாத நிலையில், சாலையோரம் மாணவ, மாணவியர் சென்றால் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விட்டதால், இரவில் பலர் பள்ளி வளாகத்தில் புகுந்து, சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போதைய நிலையில் பள்ளிக்கு கழிப்பறை, சுற்றுச்சுவர்தான் பிரதான தேவை. பள்ளி மேலாண்மை குழுவினரும் இதைத்தான் வலியுறுத்தியுள்ளனர்.நிறுத்தப்பட்ட பணியை விரைந்து முடித்து, மாணவ-மாணவியரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் கூறினர்.