பர்கூர் மலைப்பாதையில் இரவில் 35 டன் சர்க்கரையுடன் எரிந்த லாரி
அந்தியூர் கர்நாடக மாநிலம் மைசூரு, பண்டாரபுராவில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து, 35 டன் அஸ்கா சர்க்கரை ஏற்றிய, 16 டயர் கொண்ட ஒரு லாரி தஞ்சாவூருக்கு புறப்பட்டது. ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதை வழியாக நேற்றிரவு வந்தது. கொள்ளேகாலை சேர்ந்த சையது யாகூப், 37, ஓட்டினார். கிளீனராக அதே பகுதியை சேர்ந்த சானவல்லா, 46, உடன் வந்தார். தாமரைக்கரையை அடுத்த முதல் கொண்டை ஊசி வளைவில், 7:15 மணிக்கு வந்தபோது, இன்ஜினில் 'ஷார்ட் ஷர்க்யூட்' ஏற்பட்டு தீப்பிடித்து எரிய துவங்கியது. உடனடியாக லாரியை நிறுத்தி, டிரைவரும் கிளீனரும் இறங்கினர். தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியது. இதைக் கண்ட அவ்வழியே பயணித்தவர்கள், அந்தியூர் தீயணைப்பு நிலையம், பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மலைப்பகுதி என்பதால் அந்தியூர் தீயணைப்பு நிலைய வாகனம் செல்ல அரை மணி நேரத்துக்கும் மேலானது. அதற்குள் ஒட்டு மொத்த லாரியும் பற்றி எரிய துவங்கியது.சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மலைப்பகுதி மரங்களில் தீ பரவாமல் இருக்க, மரங்கள், செடிகள், கொடிகள் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அரை மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் லாரி முற்றிலும் தீக்கிரையானது. லாரியில் இருந்த சர்க்கரை வெப்பத்தில் உருகி, சர்க்கரை பாகாக சாலையில் ஓடியது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து தடைபட்டது. வாகன ஓட்டிகள் திக்... திக்...சர்க்கரை பாகை அகற்றிய பிறகே வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் மலையில் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் வாகனங்களில் சிக்கி கொண்டவர்கள் தவிப்புக்கு ஆளாகினர். வன விலங்குகள் நடமாடும் என்பதால், தவிப்புடன் பீதியும் சேர்ந்து கொண்டது.