பராமரிப்பு இல்லாத மா.க.வா., அலுவலகம்
ஈரோடு :ஈரோட்டில் சென்னிமலை சாலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் தரத்தை உறுதி செய்வது, தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் வாடகை கட்டடத்தில் இயங்கியது. அதன்பின் சென்னிமலை ரோட்டில், 2.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சொந்த கட்டடத்துக்கு வந்தது.அலுவலகத்தில் துாய்மை பணி முறையாக நடக்காததால், செடி, கொடி படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அலுவலக நுழைவுவாயில் இரும்பு கேட் துருப்பிடித்து அடிப்பாகம் உடைந்துள்ளது.இதனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது. மாநகரில் தொழிற்சாலைகள் எப்படி இருக்க வேண்டும் என உத்தரவிடும் அலுவலகம், பாழடைந்து இருக்கலாமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.