பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர்
சத்தியமங்கலம், நவ. 22 -ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, தாளவாடிமலையில் உள்ள சேஷன்நகரில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார். தாளவாடி, உக்கரம், பவானி, பெருந்துறை, புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்புகளை வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்து பேசினார். விழாவில் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, உள்ளாட்சி துறை பிரதிநிதிகள், மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக, அவசர கதியில் எம்.சாண்ட் கொண்டு சாலை அமைத்தனர். நேற்று காலை அமைச்சர் வரும் வரை, சாலைக்கு தண்ணீர் ஊற்றி மட்டம் செய்தனர். இதை அப்பகுதிவாசிகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.* தாளவாடி மலையில் ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், 16 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். எனவே காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வலியுறுத்தி, கம்யூ., கட்சிகள் சார்பில், அமைச்சர் சுப்ரமணியனிடம் மனு தரப்பட்டது.