போக்குவரத்தில் மாற்றம் செய்தும் பணி தாமதம் ரயில்வே மெத்தனத்தால் வாகன ஓட்டிகள் வருத்தம்
ஈரோடு ஈரோடு கொல்லம்பாளையம் நுழைவு பாலத்தில் ஏற்பட்ட சேதம், சில மாதங்களுக்கு முன் ரயில்வே சார்பில் சரி செய்யப்பட்டது. இதற்காக ஒரு மாதம் வரை கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் சேதமானதால், கலெக்டரின் உத்தரவால் நீண்ட இழுபறிக்கு பின், ரயில்வே நிர்வாகம் சேதத்தை சரி செய்ய ஒத்து கொண்டது.இதையடுத்து ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த, 27ம் தேதி முதல் கன ரக வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்துள்ளனர். இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு ஏழு நாட்களாகியும் இன்னும் பணி துவங்கவில்லை. 10 நாட்கள் வரை மட்டுமே வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட தெற்கு போக்குவரத்து போலீசார், உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளனர். இன்னமும் பராமரிப்பு பணி துவங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து, ஓரிரு நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அப்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்.