உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி பாசனம் காயும் நிலையில் கடலுக்கு பாயும் தண்ணீர் அமைச்சர் துரைமுருகன் பதவி விலக நல்லசாமி வலியுறுத்தல்

கீழ்பவானி பாசனம் காயும் நிலையில் கடலுக்கு பாயும் தண்ணீர் அமைச்சர் துரைமுருகன் பதவி விலக நல்லசாமி வலியுறுத்தல்

ஈரோடு, அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வலியுறுத்தி, கீழ்பவானி பாசன பயனாளிகள், தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தலைமையில், ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. செயலாளர் நைனாமலை, பொறியாளர் செல்வமணி, சண்முகம் உட்பட பலர் பேசினர்.நடப்பாண்டு கர்நாடகா நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால், மேட்டூர் அணை நான்காவது முறையாக நிரம்பியது. 1 லட்சம் கன அடி நீர் வீதம் கடலில் வீணாக வடிகிறது. துார்வாருதல் பெயரில் பணத்தை வாரி கொண்டதன் விளைவாக, கால்வாயில் கடைக்கோடிக்கு உரிய நீர் செல்லவில்லை. அதுபோல பவானிசாகர் அணை நிரம்பி, 20,000 கன அடிக்கு மேல் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு கடலில் வீணாகிறது. கீழ்பவானி பாசனம் பெறும், 2.07 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வறண்டு காணப்படுகிறது. இங்கு பயிரிடப்பட்ட வாழை, மஞ்சள், கரும்பு, மரவள்ளி கிழங்கு போன்ற நிலுவை பயிர்கள், நீர் இன்றி வாடி உள்ளன. மராமத்து பணி, துார்வாராததை கூறி, நீர் திறப்பு தள்ளி வைத்தனர். கால்வாயில் நீர் ஓடாத, மூன்று மாத காலங்களில் ஏன் மராமத்து செய்யவில்லை, முன்னேற்பாடு ஏன் இல்லை, அவசர கதியில் வேலைகளை துவங்கி, அளவீடு இன்றி பணத்தை ஒதுக்கி முடிக்காமல் இருப்பது ஏன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்யவில்லை.அமராவதி அணையும் நிரம்பி கடலுக்கு உபரி நீர் செல்கிறது. ஆழியாறு அணை நிரம்பி, அரபிக்கடலுக்கு செல்கிறது. ஆனாலும், கொங்கு மண்டல ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள் காய்ந்துள்ளன. இத்தவறான நீர் நிர்வாகம், முன்னதாகவே திட்டமிடாமல் தண்ணீரை கடலுக்கு வீணாக்கிய செயலுக்காக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பதவி விலக வேண்டும். அதுவே அவருக்கும், தமிழகத்துக்கும் நல்லது என, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை