மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி வார விழா
ஈரோடு, டிச. 19-ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஆட்சி மொழி சட்ட வார விழா வரும், 27 வரை கொண்டாடப்படுகிறது.ஈரோடு, சம்பத் நகர் நவீன நுாலக வளாகத்தில் நேற்று, அரசு துறை ஊழியர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. தமிழில் கோப்புகள் தயாரிப்பு, கடிதங்கள், குறிப்பு தயாரிப்பு, கோப்பு பராமரிப்பு போன்ற பல்வேறு அலுவல் சார்ந்த கடிதங்களை, தமிழில் முழுமையாக எழுதுவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட தமிழ் வளர்ச்சி முன்னாள் இயக்குனர் தேவதாசு, பயிற்சி அளித்தார். தமிழ் வளர்ச்சி துறை அலுவலர் வெண்ணிலா வரவேற்றார். மகேஸ்வரி நன்றி கூறினார்.இன்று (19) ஆட்சி மொழி சட்டம், அரசாணை, ஆட்சி மொழி ஆய்வுகள், 'குறைகளும் - நடவடிக்கைகளும்' என்ற தலைப்பில் மதுரை உலக தமிழ் சங்க இயக்குனர் சந்திரா, மொழி பயிற்சி, 'மொழி பெயர்ப்பும் கலை சொல்லாக்கமும்' என்ற தலைப்பில் பேராசிரியர் விஸ்வநாதன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். 27 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.ஏற்பாடுகளை, ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் இளங்கோ செய்து வருகிறார்.