உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வ.உ.சி., பூங்காவை பூட்டியதால் மக்கள் ஏமாற்றம்; பராமரிப்பு பணி நடப்பதாக மாநகராட்சி சமாளிப்பு

வ.உ.சி., பூங்காவை பூட்டியதால் மக்கள் ஏமாற்றம்; பராமரிப்பு பணி நடப்பதாக மாநகராட்சி சமாளிப்பு

ஈரோடு: ஈரோடு மாநகரில் உள்ள வ.உ.சி., பூங்கா, ௮.59 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 6.25 ஏக்கரில் மெயின் பூங்காவும், 1.75 ஏக்கரில் சிறுவர் பூங்கா உள்ளது. முன்பு மிருக காட்சி சாலை, சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள், ரயில் உள்ளிட்டவற்றால் பொழுது போக்கு பூங்காவாக இருந்தது. தற்போது பூங்காவாக உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை நேரங்களில் குடும்பத்துடன் மக்கள் சிலர் வந்து செல்வது வழக்கம். காலை நேரங்களில் இளம்பெண்கள், ஆண்களை பூங்காவில் காணலாம். பூங்காவில் நுழைவு கட்டணம், வீடியோ கேமரா, ஸ்டில் கேமரா உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. டெண்டர் காலம் முடிந்ததால் சில மாதங்களுக்கு முன் பூங்கா பூட்டப்பட்டது. பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பூங்காவை திறக்க மக்கள் வலியுறுத்திய நிலையில் பூங்கா திறக்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன் மீண்டும் பூட்டப்பட்டது. சிறுவர் பூங்காவும் பூட்டப்பட்டது. முன்னறிவிப்பின்றி பூங்கா மூடப்பட்டதால் நேற்று வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, 'பூங்காவுக்கான ஏலம் நாளை நடக்கிறது. இதனால் பராமரிப்பு பணி செய்வதற்காக பூட்டப்பட்டுள்ளது' என்றனர். ஆனால் பூங்காவில் பராமரிப்பு பணி எதுவும் நடக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ