தாயும், மகனும் இறந்தது குறித்து கோபியில் போலீசார் விசாரணை
-கோபி, கோபியில் வீட்டுக்குள் தாயும், மகனும் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், கோபி, குப்பாண்டவர் வீதியில் ஒரு வீட்டுக்குள், இரு உடல்கள் கிடப்பதாக, கோபி போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, இரு உடல்களையும் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், வீட்டுக்குள் இறந்து கிடந்தது அதே பகுதியை சேர்ந்த பர்வதம், 50, அவரது மகன் சபரிவாசன், 25, என தெரியவந்தது. பர்வதம் பனியன் கம்பெனியிலும், சபரிவாசன், பெருந்துறையில் உள்ள தனியார் கல்லுாரி அலுவலகத்திலும் பணிபுரிந்து வந்துள்ளனர். மேலும், சபரிவாசனின் சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதத்தை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், 'தங்களது இறப்புக்கு யாரும் காரணமில்லை' என எழுதி, இருவரும் கையெழுத்திட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் இறந்து போன இருவரும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில், கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.