வெளியூர் சென்றால் தகவல் தர வேண்டும் பொது மக்களுக்கு போலீசார் அறிவிப்பு
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை சுற்று வட்டாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ளன. இங்கு ஏராளமான வடமாநிலத்தவர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளிக்கு பலரும் சொந்த ஊருக்கு சென்று விடுவர். இந்நிலையில், வெளியூர் சென்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, பொது மக்களுக்கு வெப்படை போலீசார் நேற்று அறிவித்துள்ளனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:வெளியூர் செல்லும் நபர்கள், வீடு பூட்டி இருப்பதை போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டின் வெளிப்புறத்தில், மின் விளக்கு எரிவதை உறுதிப்படுத்த கொள்ள வேண்டும். நகை பாலிஷ் போட்டு தருவதாகவோ, பழைய இரும்பு இருக்கிறதா என கேட்டோ, சாமி படத்தை வைத்துக் கொண்டோ தெருவில் வருபவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.நகைகள், மற்றும் விலை உயர்ந்த பொருட்களை தயவு செய்து வங்கி லாக்கிரில் வைக்க வேண்டும். திருட்டு போன பொருட்களை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதால், தகுந்த முறையில் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறது. தங்களால் முடிந்த அளவிற்கு, வீட்டை சுற்றிலும் அல்லது தெரு முனையில் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு உடடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.