காலிங்கராயனை ஒட்டி பேபி வாய்க்கால் அமைக்க ரூ.80 கோடிக்கு திட்ட மதிப்பீடு
ஈரோடு: காலிங்கராயன் வாய்க்காலில் சாய, தோல் கழிவு, சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்கும் விதமாக, வைராபாளையம் முதல் வெண்டிபாளையம் வரை, ௬ கி.மீ., துாரத்துக்கு பேபி வாய்க்கால் கட்ட விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்தனர். இதை தொடர்ந்து பேபி வாய்க்கால் அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரிக்க, நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஆய்வு செய்த நீர்வளத்துறையினர், பேபி வாய்க்கால் கட்ட, 80 கோடி ரூபாய் செலவாகும் என்று, அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதி ஒதுக்கீடு மற்றும் பணி துவக்குவதற்கான ஆணையை எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறையினர் கூறியதாவது: பேபி வாய்க்கால் கட்டப்படும்போது, மாநகராட்சி நிர்வாகம் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அப்போது தான் பேபி வாய்க்கால் நீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விட இயலும். இவ்வாறு கூறினர்.