| ADDED : நவ 28, 2025 12:53 AM
ரோடு, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.ஈரோடு சென்னிமலை தாலுகா வடமுகம் வெள்ளோடு அருகே புத்துார் புதுப்பாளையம் என்ற இடத்தில், 67 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவ்விடத்தில் தங்களுக்கு, அரசு திட்டம் மூலம் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னிமலை பி.டி.ஓ.,க்கள் வீடு கட்டுவதற்கான பரிந்துரை, திட்ட வரைவுகளை அனுப்பவில்லை என கடந்த, 17ல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலையிட்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தருவதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். அத்துடன், 3.10 லட்சம் ரூபாய் மட்டும் அரசு வழங்கும். மீதி தொகையை மாற்றுத்திறனாளிகள் செலுத்தி வீடு கட்டும் பணியை உரிய காலத்தில் முடிக்க உறுதிமொழி பெற்றனர்.இதுவரை நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடர்ந்தனர். போலீசார், போன் மூலம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பேசி, 15 நாட்கள் அவகாசம் கோரினர். இதை ஏற்று, டிச., 15 வரை அவகாசம் வழங்கவும், அதன் பின்னரும் பணிகள் துவங்காவிட்டால், கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் எனக்கூறி சென்றனர்.