சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :வனத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் கெடு
சென்னிமலை:சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள சில்லாங்காட்டுவலசு பகுதியில், இரண்டு மாதமாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஆடு, மானை கடித்து கொன்றுள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.மனிதர்களை பலி வாங்கும் முன், சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி, அய்யம்பாளையம், சில்லாங்காட்டு வலசு, வெப்பிலி பகுதி விவசாயிகள், மக்கள், சென்னிமலை - காங்கேயம் பிரதான சாலையில், நேற்று மறியல் செய்ய முயன்றனர். அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பிரதான சாலைக்கு வரவிடாமல் போலீசார் தடுத்ததால், வெப்பிலி சாலையில் ஆர்ப்பாட்டம் செய்து, சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 15 நாட்களுக்குள் சிறுத்தையை பிடிக்காவிட்டால் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, பொதுமக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே மக்கள் கலைந்து சென்றனர். மறியலால் போக்குவரத்து ஏதும் பாதிக்கவில்லை.டிரோனில் தேடுதல்மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தை தொடர்ந்து, சென்னிமலை காப்புக்காட்டை ஒட்டிய பகுதியில் வனத்துறையினர் நேற்று மாலை, தெர்மல் டிரோன் கேமரா மூலமாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மலை பகுதியில், 900 ஏக்கருக்கு மேல் டிரோனை பறக்கவிட்டு தேடுதல் பணி நடந்ததாக தெரிவித்தனர்.