பொது கழிவுநீர் சுத்திகரிப்பு பணி: முதல்வரால் அடிக்கல் நாட்டல்
ஈரோடு ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில், 15.70 கோடி ரூபாய் மதிப்பில், 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 159.53 கோடி ரூபாயில், 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25.41 கோடி ரூபாய் மதிப்பில், 4,524 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பவானி, ஜம்பையில், 59 லட்சம் ரூபாயில் கால்நடை மருந்தகம், கூட்டுறவு துறை மூலம் சத்தியமங்கலம் அருகே கோணமூலை கிராமத்தில், 1.65 கோடி ரூபாயில், 1,000 டன் கொள்ளளவு ஏலக்கூட கிடங்கு, கண்ணம்மாபுரத்தில், 16 லட்சம் ரூபாயில் வீரப்பம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கிளை அலுவலக கட்டடம்.வேளாண் துறை சார்பில், அந்தியூர் அருகே கொண்டையம்பாளையத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர் களம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 10 கோடி ரூபாய் செலவில் மஞ்சள் ஏற்றுமதி மையம் உட்பட பல நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளார். பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில், 136.76 கோடி ரூபாயில் தினமும், 2,000 கிலோ லிட்டர் கொள்ளளவு உள்ள ஜீரோ திரவ வெளியேற்ற அடிப்படையிலான, பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி, இயக்குதல், பராமரிப்பு பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்துள்ளார். அதேபோன்று பல்வேறு பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். கண்காட்சி ஒரு நாள் நீட்டிப்புவேளாண்மை, உழவர்கள் நலன், உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி என பல்வேறு தலைப்புகளில் அரங்குகள் அமைத்துள்ளனர். அவற்றை விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர். விவசாயிகள் பார்வையிட வசதியாக இக்கண்காட்சி, ஒரு நாள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு வரும், 13 வரை நடக்க உள்ளது.* விழா முடிந்த பின், முதல்வர் ஸ்டாலின் பவானி வழியாக மேட்டூர் சென்றார். அப்போது பவானி பழைய பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., நகராட்சி செயலர் நாகராஜ், நகர்மன்ற தலைவர் சிந்துாரி, மத்திய மாவட்ட செயலர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, பவானி ஜமுக்காளம் வழங்கி வரவேற்றனர். பின்னர், முதல்வர் ஸ்டாலின் 3 கி.மீ., துாரம் நடைபயணமாக சென்று, பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.