மாநகரில் செப்பனிடாத சாலைகளால் விபத்து அபாயம்
ஈரோடு, ஈரோடு மாநகரில் நீண்ட நாட்களாக சில சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளதால், குண்டு-குழியாகி, விபத்து அபாயத்துக்கு வழிவகுத்து வருகின்றன.ஈரோடு-பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை சிக்னல் அருகே, சாலையோரம் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இடதுபுறம் டூவீலரில் செல்வோர் ஒதுங்கும் பட்சத்தில் பள்ளத்தில் விழ வேண்டிய நிலை ஏற்படும். இந்த இடத்தில் வாகன விபத்து அபாயம் காணப்படுகிறது. இதே போல் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் ஹைமாஸ் விளக்குக்காக ஒயர் கொண்டு செல்ல குழி தோண்டி மூடினர். தற்போது குழி தனியாகவும், கான்கிரீட் சாலை தனியாகவும் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டில் சேதமான சாலைகளால் ஆட்டோ டயர்கள் விரைவில் வீணாகும் சூழல் உருவாகி வருகிறது. எனவே பஸ் ஸ்டாண்ட் சாலையை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.