சாலை ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
ஈரோடு;ஈரோடு நகரில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஈரோட்டில், சாலைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ப.செல்வம் பார்க், மணிக்கூண்டு, கொங்கலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் ஜவுளி, பழம், பலகார கடைகள் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்தன. அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வந்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இருந்தும் வியாபாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.இந்நிலையில், நேற்று உதவி நகர திட்டுமிடுனர் ஹேமலதா தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குப்பை வாகனம் வரவழைக்கப்பட்டு விளம்பர பேர்டு, பழக்கூடை, அட்டை பெட்டிகள் என பல்வேறு பொருட்களை ஏற்றிச் சென்றனர். ஜவுளி கடைகளை அகற்றியபோது, பாதசாரிகளை நம்பி பிழைப்பு நடத்தும் நிலையில், கடைகளை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதற்கு,' கனி மார்க்கெட் ஜவுளி வளாகத்தில் உள்ள கடைகளை, குறைந்த வாடகைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அனைத்து சாலையோர வியாபாரிகளும் அங்கு சென்று வியாபாரத்தை தொடரலாம்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.