கீரைகள் சாகுபடி குறித்து விஞ்ஞானிகள் யோசனை
கோபி:நுண் கீரைகள் சாகுபடி குறித்து, கோபி வேளாண் அறிவியல் நிலையத்தின், மனையியல் விஞ்ஞானி சிவா, முதன்மை விஞ்ஞானி அழகேசன், விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: நுண் கீரைகள் என்பது காய்கறி, தானியம் மற்றும் கீரை வகைகள் முளைத்த பின், ஏழு முதல் 21 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களாகும். இவை முழு வளர்ச்சி பெற்ற காய்கறிகளை விட, நான்கு முதல் 40 மடங்கு அதிக சத்து கொண்டவை. சி, இ, கே வைட்டமின், பீட்டா, கரோட்டின், இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது. இன்றைய சூழலில் குறைந்த இடம், குறைந்த செலவு மற்றும் குறுகிய காலத்தில், அதிக உற்பத்தி திறன் காரணமாக, நுண் கீரைகள் சாகுபடி சிறந்த மாற்று விவசாயமாக உள்ளது. இதற்கான பயிற்சிகளை கோபி வேளாண் அறிவியல் நிலையம், இளைஞர் மற்றும் பெண்களுக்கு வழங்கி, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இவ்வாறு கூறினர்.