கல்லுாரி முதல்வர் மீது பாலியல் புகார் சமூக நலத்துறை அதிகாரி விசாரணை
ஈரோடு:அரசு கல்லுாரி முதல்வர் மீது பாலியல் புகார் தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி விசாரித்தார்.எழுமாத்துார் அரசு கலை கல்லுாரி முதல்வராக (பொறுப்பு) ராஜேந்திரன், இரு ஆண்டாக பணி செய்கிறார். பெண் ஆசிரியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக, ஈரோடு கலெக்டருக்கு பெயர் குறிப்பிடாமல் கடிதம் சென்றது. இதன் அடிப்படையில் விசாரித்து அறிக்கை வழங்க, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கல்லுாரிக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில், 34 பேராசிரியர்களிடம் விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்தார். இதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை விசாரணை நடந்தது. இதில், 28 பேராசிரியர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: கல்லுாரி முதல்வர் சற்று 'ஸ்ட்டிரிக்ட்டாக' செயல்படுவாராம். கலெக்டருக்கும், மகளிர் ஆணையத்துக்கும் சென்ற மொட்டை கடிதத்தில், முதல்வர் பெயரை மட்டும் குறிப்பிட்டு பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர், விபரம் ஏதுமில்லை. கல்லுாரியில் காழ்ப்புணர்ச்சி, ஜாதி ரீதியிலான பிரச்னையும் உள்ளது. விசாரணைக்கு பின் குற்றச்சாட்டு குறித்து தெரியவரும். இதுவரை, 30 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது. இவ்வாறு கூறினர்.