மலைகிராம குழந்தைகள் படிக்க சிறப்பு ஏற்பாடு
ஈரோடு, டி.என்.பாளையம் அருகே விளாங்கோம்பை, கெம்பனுார் மலை கிராமத்தில் கடந்த மாதம் தொட்டிய கனமழையால், தரைப்பாலம், பாதை தேசமடைந்தது. இதனால் பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள், வனத்துறையினர் உதவியுடன் அங்கு ஆய்வு செய்தனர். இதில், 6 கி.மீ., துார சாலை, தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க இயலாததால், 29 மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் தவிப்பதை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து வினோபா நகர் மற்றும் கொங்கர்பாளையம் பள்ளிகளில் இருந்து தலா, இரு ஆசிரியர்கள் பைக்கில், விளாங்கோம்பை, கெம்பனுார் கிராமங்களுக்கு சென்று வகுப்பெடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி நேற்று முதல் பைக்கில் சென்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கியுள்ளனர்.