சாலையை குப்பை கிடங்காக மாற்றிய தற்காலிக கடைகள்
ஈரோடு:ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகரில் பிராதன சாலைகளில், பலர் தற்காலிக கடைகள் அமைத்தனர். பூசணி, பொரி-கடலை, வாழைமரம், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தனர்.இதில் விற்பனையாகாத பூசணி, வாழை மரங்களை அப்படியே போட்டு சென்றனர். இதனால் மாநகரில் நேற்று பல இடங்களில் பிரதான சாலைகள், குப்பை கிடங்காகவே மாறிவிட்டிருந்தன. டிராக்டர்களில் சென்ற மாநகராட்சி ஊழியர்கள், வாழை மரம் மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட கழிவுகளை அள்ளி சென்றனர். பெரும்பாலும் வெளியூர்காரர்களே தற்காலிக கடைகள் அமைக்கின்றனர். பண்டிகை விற்பனை முடிந்ததும் மீதமாகும் பொருட்களை அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால் துாய்மை பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது.தற்காலிக கடை அமைக்க அனுமதி வழங்கும் மாநகராட்சி, விற்பனைக்கு பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்யவும் கடைக்காரர்களுக்கு உத்தரவிட வேண்டும். ஆண்டுதோறும் இதேபோல் 'கல்லா' கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, சுகாதாரம் காப்பதில் 'கோட்டை' விட்டால் எப்படி என்பதே, மக்களின் ஆதங்கமாக உள்ளது.