அ.தி.மு.க., - பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம் மக்களும் இணைந்ததால் பதற்றம்
தாராபுரம்::தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டம், தலைவர் சுதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியவுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமி, பா.ஜ., கவுன்சிலர் கார்த்திகேயன், தங்களது வார்டுகளில் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி வெளிநடப்பு செய்து, அலுவலக நுழைவாயில் அருகில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக கூட்டம் முடிந்த நிலையில், செயல் அலுவலர் அறை முன் சென்று இருவரும் போராட்டத்தை தொடர்ந்தனர்.இவர்களுடன் மக்களும் இணைந்ததால் பதற்றமான சூழல் உருவானது. தகவலறிந்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் விஜயசாரதி உள்ளிட்ட போலீசார் சென்றனர். அதிகாரிகளுடன் சேர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 14வது வார்டில் குடிநீர் குழாய் இணைப்பில் போட்ட பூட்டை அகற்ற வேண்டும்.நல்லாம்பாளையம் தார்ச்சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என மக்கள் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.