புரட்டாசி மாத முதல் சனி வழிபாடு அமோகம்
புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், மக்கள் விரதமிருந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இதன்படி புரட்டாசி மாத முதலாவது சனிக்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலுக்கு, காலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்துாரி அரங்கநாதர், கோவில் மண்டபத்தில் அருள் பாலித்தார். சயன கோலத்தில் கருவறையில் அரங்கநாதர் காட்சியளித்தார்.* கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி வரதராஜ பெருமாள் கோவில், பச்சைமலை மரகத வெங்கடேச பெருமாள் கோவில், மூலவாய்க்கால் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில், புரட்டாசி முதல் சனி வழிபாடு களை கட்டியது. * அந்தியூர் தேர்வீதி பேட்டை பெருமாள் கோவிலில், திருப்பதி அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இதேபோல் பெரிய ஏரி பெருமாள் கோவில், தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், பட்லுார் கரிய வரதராஜ பெருமாள் கோவில், அந்தியூர் கோட்டை பெருமாள் கோவில், கிருஷ்ணாபுரம் கரை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜை, அலங்காரம் என, சனிக்கிழமை வழிபாடு, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். * சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். பெருமாள் தாயாருடன் சகடை தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. இதேபோல் சென்னிமலை டவுனில் ஸ்ரீசெல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூப மகா விஷ்ணு ஆலயத்தில், ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. முருங்கத்தொழுவு வடுகபாளையம் அணியரங்க பெருமாள் மலை கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.* பெருந்துறை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், எல்லப்பாளையம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி மாத முதல் சனி வழிபாட்டில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். * புன்செய்புளியம்பட்டி கீழ்முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையில் திம்மராய பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள், தாசர்களுக்கு அரிசிப்படி வழங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.நிருபர்கள் குழு