சித்தோடு சிறுமி சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் சடலத்தை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம்
ஈரோடு, நவ. 9-சித்தோடு, வாசுவபட்டி, மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி சுந்தர்ராஜின் மகள் மோனிகா, 16; சித்தோட்டில் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். ஈரோடு, ஆர்.என்.புதுாரை சேர்ந்த ராஜ்குமார் மகன் சுனில், 22, என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், ஊசிமலையில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் பகுதியில் பைக்குடன் தடுமாறி விழுந்தனர். இதில் மோனிகாவுக்கு கழுத்து, கை, கால் உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. சுனில் லேசான காயமடைந்தார். அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி மோனிகா இறந்தார். மோனிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தனர். மோனிகா சாவில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை, உடலை பெற மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 'பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், சாவுக்கான காரணம் தெரியவரும். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என உறுதியளித்தனர். இதையடுத்து மோனிகா உடலை, உடற்கூறு பரிசோதனை செய்ய, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்ப சம்மதித்தனர்.