நள்ளிரவில் இடிந்து விழுந்த வ.உ.சி., பூங்கா சுற்றுச்சுவர்
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி., பூங்கா உள்ளது. பவானி சாலையை ஒட்டியுள்ள பூங்காவின் சுற்றுச்சுவர் வலுவிழந்து காணப்பட்டது. பூங்காவிற்குள் தேங்கும் மழை நீரே இதற்கு காரணம், இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாநகரில் மிதமான மழை பெய்தது. இதனால் பூங்காவின் சுற்றுச்சுவர் ஓதம் பிடித்த நிலையில் காணப்பட்டது. நள்ளிரவில், ௧௦ அடி துாரத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நள்ளிரவு என்பதால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின் பொக்லைன் வாகனம் மூலம் சுவர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.