குன்றிமலைக்கு 3ம் நாளாக போக்குவரத்து துண்டிப்பு
சத்தியமங்கலம், கடம்பூர் மலையில் உள்ள குன்றி மலையில் கடந்த, 18ம் தேதி நள்ளிரவு கொட்டிய மழையால், மாமரத்துபள்ளம், மாதேஸ்வரன் கோவில் பள்ளம் என இரு இடங்களில் ஏற்பட்ட காட்டாற்றில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை குன்றி மலை கிராமத்தில் இருந்து சத்தியமங்கலம் சென்ற அரசு பஸ் செல்ல முடியாமல் குன்றிக்கே திரும்பியது. இரு தரைப்பாலம் வழியாக டூவீலர்களில் மட்டுமே, அதுவும் தட்டுத்தடுமாறி செல்ல முடிகிறது. பிற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் மூன்றாவது நாளாக நேற்றும் குன்றி மலை கிராமத்துக்கு அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே, இரு பள்ளங்களும் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கும். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க, மலை கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.