போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா அமெரிக்க அதிபர் அபாண்டம்
வாஷிங்டன் :சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட, 23 நாடுகளை அமெரிக்க பார்லிமென்டில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பட்டியலிட்டுள்ளார். நம் நாட்டுடன் நட்புறவுடன் இருப்பது போன்ற நடவடிக்கைகளை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு பக்கம் மேற்கொள்கிறார். மறுகணமே, சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்து நம் நாட்டின் மீது அபாண்டமாக பழி சுமத்திஉள்ளார். அமெரிக்க பார்லிமென்டில் பட்ஜெட் தொடர்பான விதத்தின்போது, சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். இப்பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட 23 நாடுகளின் பெயர் இடம்பெற்றுள்ளன. இந்நாடு கள் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் முன்னோடி ரசாயனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் அல்லது செயல்படுத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அந்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.