பெரிய ஏரி வற்றி வருவதால் நெற்பயிர் கருகும் அபாயம்: திருக்கோவிலுார் பகுதி விவசாயிகள் கவலை
திருக்கோவிலுார் பெரிய ஏரி 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இது மட்டுமல்லாது ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் கச்சிகுச்சான், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர் என 7க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரிக்கு, ஆற்று வாய்க்கால் முடியனுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்கி, 7 கி.மீ., பயணிக்கிறது. பருவமழைக்கு முன்பாக பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் உதவியுடன் ஏரி வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.ஒரு சில நாட்களிலேயே பெஞ்சல் புயலால் வாய்க்கால் முழுதுமாக மணல்மூடி சேதமடைந்தது. இதனை அதிகாரிகள் இன்று வரை கண்டுகொள்ளவில்லை.இதன் காரணமாக ஏரியில் வேகமாக தண்ணீர் வற்றி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால், தாமதமாக பயிர் செய்யப்பட்ட 450 ஏக்கர் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் கடைமடை பகுதி விவசாயிகளுக்கும், ஏரிக்கு அருகில் பயிர் செய்திருக்கும் விவசாயிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்வதில் தினசரி மோதல் ஏற்படுகிறது. வரும் 16ம் தேதி சாத்தனுார் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க இருக்கும் நிலையில் அதற்குள் ஏரி வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் சீரமைத்தால் மட்டுமே எரிக்கு தண்ணீர் வரும், பயிர்களை காப்பாற்ற முடியும்.இந்நிலையில், ஏரி வாய்க்கால் மூலம் நேரடி பாசன வசதி பெறும் மண்டபம் கிராம விவசாயிகள் இனியும் நீர்வளத் துறையை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்து சிறிய அளவில் கால்வாயை துார் வாரியுள்ளனர்.இருப்பினும் மண்டபத்தை தாண்டி திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வராது என்ற காரணத்தால் திருக்கோவிலுார் ஏரி பாசன விவசாயிகள் ஒன்றிணைந்து, கால்வாயை துார்வாரும் பணியை துவங்க இருப்பதாக முன்னணி விவசாயி ராஜகோபால் தெரிவித்துள்ளார். என்றாலும் ஆற்றுப்பகுதியில் இருக்கும் நிரந்தர தடுப்பு கட்டையான கல்வெர்ட்டை நீர்வளத்துறை கட்டிக் கொடுத்தால் மட்டுமே முழு அளவு தண்ணீரை ஏரிக்கு திருப்ப முடியும்.இனிவரும் நாட்களிலாவது நீர்வளத்துறை போர்கால அடிப்படையில் கல்வெர்ட்டை சீரமைத்து கொடுத்தால், சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு ஏரியை நிரப்பி பயிர்களை காப்பாற்ற முடியும்.
விவசாயிகள் அதிர்ச்சி
திருக்கோவிலுார் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 46 ஏரிகள் உள்ளது. இதில் பெரிய ஏரியாக கருதப்படும் 13 ஏரிகள் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் மீன் வளர்க்க ஏலம் விடப்படுகிறது. அதில் ஒன்றுதான் திருக்கோவிலுார் ஏரி. இந்த ஆண்டு மீன் வளர்ப்புக்கான குத்தகை ஏலம் விடாத சூழலில், தற்போது ஏரி நீர் வேகமாக வற்றி வருவதால் மீன்வளத் துறையே நேரடியாக மீன்பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மீன்பிடிக்க துவங்கினால் தண்ணீர் வேகமாக வற்றிவிடும் என்பதால் விவசாயிகள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.