வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா
உளுந்துார்பேட்டை : சிறு வணிகர்களை நசுக்கும் ஜி.எஸ்.டி., பறக்கும் படையை தடை செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உளுந்துார்பேட்டையில் வியாபாரிகள் சங்க கட்டடத்தின் புதிய முதல்தளம் திறப்பு விழா, 62ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், வெள்ளையூர் மறுவாழ்வு இல்லத்தில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுகனி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.புதிய முதல் தள கட்டடத்தை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இணைச் செயலாளர்கள் ஏழுமலை ஆண்டு செயல்பாடுகளை விளக்கி பேசினர். செயலாளர் அமிர்தகணேசன், பொருளாளர் சங்கர் வாழ்த்திப் பேசினர்.கூட்டத்தில், சிறு வணிகர்களை நசுக்கும் ஜி.எஸ்.டி., பறக்கும் படையை தடை செய்ய வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டம் போல் தென்பெண்ணை ஆறு மணலுார்பேட்டையில் இருந்து உளுந்துார்பேட்டை பாசனத்திற்கு நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்துார்பேட்டையில் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில துணைச் செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.