கல்லுாரி மாணவனை தாக்கிய இருவர் கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே கல்லுாரி மாணவரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனுாரை சேர்ந்த அன்சர் அலி மகன் அர்பாஸ்அலி,19; இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண்ணிடம் சமூக வலைதளத்தில் பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஒரு மணி அளவில் பெண்ணின் வீட்டிற்கு சென்ற அர்பாஸ்அலி அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்.இதனைக் கண்ட பெண்ணின் உறவினர்களான ரஷீத்கான் மகன்கள் அன்வர்கான்,28; ரகுமான்கான்,20; ஆகிய இருவரும் சேர்ந்து அர்பாஸ்அலியை தாக்கி மொபைல்போனை பறித்துள்ளனர். மீண்டும் நேற்று காலை மொபைல்போனை கேட்க சென்றபோது அர்பாஸ் அலியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அப்பகுதியில் உள்ள ஏரியில் வைத்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அர்பஸ் அலியை அருகில் இருந்தவர்களின் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து அன்வர்கான், ரகுமான்கான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.