உள்ளூர் செய்திகள்

நிறைவேற்றப்படுமா

மணிமுக்தா ஆற்று குடிநீர் திட்டம் மீண்டும்...குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் எதிர்பார்ப்புதியாகதுருகம் பேரூராட்சியில் புக்குளம், பெரியமாம்பட்டு, உதயமாம்பட்டு ஆகிய ஊர்கள் உள்ளன. இங்கு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு பகுதிகளில், குடிநீர் வழங்க மலை அடிவாரத்தில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை தொட்டிகள் உள்ளன. தென்பெண்ணை ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும், மணலுார்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

குடிநீர் பற்றாக்குறை

இந்த குடிநீர் பேரூராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதுமானதாக இல்லை. நாளுக்கு நாள் நகரில் வீடுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அனைத்து வீடுகளிலும் உள்ள 'போர்வெல்' மூலம் ஓரளவு தண்ணீர் தேவை பூர்த்தியானாலும், அதனை குடிநீராக பயன்படுத்த முடியவில்லை. அதனால் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மட்டும் நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு மேல், குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகக்கூறி விவசாயிகள் புதிதாக போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மணி முக்தா ஆற்று குடிநீர் திட்டம்

இந்நிலையில் மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் குடிநீர் வினியோகத்திற்கு, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது. தியாகதுருகத்திற்கு கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன், மணிமுக்தா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட்டது.சேலம்-உளுந்துார்பேட்டை, நான்கு வழி சாலை திட்டத்திற்கு பள்ளம் தோண்டிய போது மணிமுக்தா ஆற்றில் இருந்து நகருக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய் உடைந்து சேதமானது. அதன் பின்னர் அந்த குழாயை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி இருந்தால், அனைத்து இடங்களிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திருக்க முடியும். தற்போது ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு மாற்றாக மீண்டும் மணிமுக்தா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி