தேனீக்கள் கொட்டியதில் 19 மாணவர்கள் காயம்
ரிஷிவந்தியம் : அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதால் 19 மாணவ- மாணவியர் காயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. வாணாபுரம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக மாணவ, மாணவியர் அமர்ந்தனர். அப்போது, மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்ததால், தேனீக்கள் மாணவர்களை துரத்தியது. இதனால் பதறியடித்து ஓடிய மாணவர்களை தேனீக்கள் கொட்டியதால் காயம் அடைந்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மணிமேகலை உள்ளிட்டோர், காயமடைந்த விஜயகுமார் மகன் ஏழுமலை,16; பழனிவேல் மகன் மணிகண்டன்,16; கண்ணன் மகன் கவுதம்,12; பாலகிருஷ்ணன் மகன் அன்புச்செல்வன்,14; சக்திவேல் மகள் தமிழ்செல்வி,13; மணிகண்டன் மகள் ரம்யா,12; கோவிந்தசாமி மகள் ராகம்மொழி,15; உள்ளிட்ட, 19 பேரை வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இதில், லோகேஸ்வரி,12; தனுஷ்,15; வீரமணி,13; ஷாம்,12; ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற மாணவர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.