50 ஆயிரம் மரக்கன்றுகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை பசுமை மாவட்டமாக உருவாக்கும் வகையில், நாற்றங்கால் பண்ணைகளில், 50 ஆயிரம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.மாவட்டத்தில், நடப்பாண்டு வடக்கிழக்கு பருவ மழைக் காலங்களில் ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் நடவும், அதற்கு தேவையான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் ஊரக வளர்ச்சி துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.இதையொட்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின்பசுமை தமிழ்நாடு இயக்கம் ஒருங்கிணைந்து, நாற்றாங்கல் பண்ணைகள் மூலம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் நாற்று பண்ணைகளில் கூடுதல் மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் புதிய நாற்றங்கால் பண்ணை அமைத்தல், மரக்கன்றுகள் உற்பத்தி, நடவு செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் விளம்பார், ஈயனுார், பாசார், பாதுார், மூலசமுத்திரம், பொய்க்குணம், நைனார்பாளையம் ஆகிய இடங்களில் நாற்றாங்கால் பண்ணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் பண்ணை அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.வேம்பு, மா, புளி, மகா கனி, நிழல் தரும் மரங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், பயன்தரும் மரங்களை உற்பத்தி செய்ய வேண்டும். மரக்கன்றுகள் நட்டு, பராமரித்து மரங்களாக உருவாக்க வேண்டும்.மாவட்டத்தில் நாற்றங்கால் பண்ணைகள் மூலம், 50 ஆயிரம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, ஊரக பகுதிகளில் நட்டு மாவட்டத்தை பசுமை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், பி.டி.ஓ.,க் கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.