| ADDED : அக் 23, 2025 06:50 AM
திருக்கோவிலுார்: தொடர் மழை காரணமாக சாத்தனுார் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் திறக்கப்படும் நீர் திருக்கோவிலுார் எல்லீஸ் உள்ளிட்ட தடுப்பணைகளை தாண்டி கடலுார் அருகே வங்க கடலில் கலக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 119 அடி கொள்ளளவு (7,321 மில்லியன் கன அடி) கொண்ட அணையில், நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 113.40 அடி (6,108 மில்லியன் கன அடி) நீர் இருப்பு உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்ணையாறு வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று அணையை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.