மனைவியை தாக்கியதாக கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது
கள்ளக்குறிச்சி; மூங்கில்துறைப்பட்டு அருகே மனைவியை தாக்கிய கணவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலபாடி கிராமத்தை சேர்ந்த அப்துல் ரசாக் மகள் ராபியா, 21; இவரும், மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த கரீம் ஷரிப் மகன் யாசின், 21; என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும், 6 மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது, தனது தாய் வீட்டில் வசித்து வரும் ராபியா, திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை கல்லூரிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். மேல் சிறுவலுார் கூட்டு சாலையில் வந்தபோது, யாசின் அவரை வழிமறித்து, அசிங்கமாக திட்டி தகராறு செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக கரீம் ஷரிப் மகன் யாசர், 23; சதார் மகன் இஸ்தியால், 25; அசின் மகன் பீரான், 31; ரகமதுல்லா மகன் ஷாஜித், 20; முபாரக் மகன் வாகித், 20; மற்றும் சிறுவர்கள் சேர்ந்து, ராபியாவை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து, ராபியா, வட பொன்பரப்பி போலீசில் புகார் அளித்தார். போலீசார் யாசின், யாசர், இஸ்தியால், பீரான், சாஜித், வாகித் ஆகியோரை கைது செய்தனர்.