அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் குவிந்த 6000 மூட்டை மக்காச்சோளம்
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று மக்காச்சோளம் வரத்து அதிகரித்த நிலையில், ரூபாய் 1.69 கோடிக்கு வர்த்தகமானது. திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிரிடப்படும் மக்காச்சோளம் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் சந்தைப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 6 ஆயிரம் மூட்டை மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. ஒரு மூட்டை மக்காச்சோளம் அதிகபட்சமாக 2,210 ரூபாயும், குறைந்தபட்மாக 1500 ரூபாய்க்கும் விற்பனையானது. சராசரி விலையாக 2,198 ரூபாய் பதிவாகி இருந்தது. மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்திருப்பதால், வரும் நாட்களில் இதன் வரத்து மேலும் அதிகரிக்க கூடும். இதன் காரணமாக மக்காச்சோளம் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல் கிணறு உள்ளிட்ட நிலத்தடி நீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடையும் தீவிரமடைந்துள்ளது. நேற்று 500 மூட்டை கம்பு, ஆயிரம் மூட்டை நெல் என 732 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 1.69 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.