உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உள்ளாட்சி நியமன பதவிகளுக்கு... 861 பேர் போட்டி;   துவங்கியது மனுக்கள் மீதான பரிசீலனை

உள்ளாட்சி நியமன பதவிகளுக்கு... 861 பேர் போட்டி;   துவங்கியது மனுக்கள் மீதான பரிசீலனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக, 861 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த ஏப்., மாதம் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினராக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதாவது, மாற்றுத்திறனாளி நபர்கள் தேர்தலில் போட்டியிடாமல் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நியமன முறையில் உறுப்பினராக நியமிக்கப்படுவர். இவ்வாறு செய்வதன் மூலம் உள்ளாட்சி அமைப்பில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும். இதில், 50 சதவீதம் பெண்களை நியமிக்க முன்னுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டது. ஊராட்சி அளவில் நடைபெறும் கூட்டம், ஒன்றிய, பேரூராட்சி, மாவட்ட கவுன்சிலர் கூட்டங்களில், நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நபர் பங்கேற்று, தங்களது கோரிக்கை மற்றும் கருத்துக்களை வலியுறுத்தி பேசலாம். கூட்டத்தில் பங்கேற்றால் அமர்வு படி வழங்கப்படும். ஆனால், உள்ளாட்சி அமைப்பில் ஓட்டளிக்க முடியாது. உள்ளாட்சியின் பதவிக்காலம் முடியும் போது, நியமன உறுப்பினரின் பதவிக்காலமும் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 ஊராட்சி, 9 ஊராட்சி ஒன்றியம், 5 பேரூராட்சி, 3 நகராட்சி மற்றும் 1 மாவட்ட ஊராட்சி உள்ளது. இங்கு நியமன உறுப்பினராக விரும்பும் மாற்றுத்திறனாளியிடமிருந்து கடந்த ஜூலை 1 முதல் 31ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. இதில், 412 கிராம ஊராட்சிகளுக்கு 713 மாற்றுத்திறனாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், ஒன்றியங்களான சின்னசேலம் 10, கள்ளக்குறிச்சி 15, கல்வராயன்மலை 1, ரிஷிவந்தியம் 12, சங்கராபுரம் 7, திருக்கோவிலுார் 8, தியாகதுருகம் 5, திருநாவலுார் 10, உளுந்துார்பேட்டை 9 என மொத்தமாக 77 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், சின்னசேலம், மணலுார்பேட்டை, சங்கராபுரம், வடக்கனந்தல் ஆகிய 4 பேரூராட்சிகளில் தலா 4, தியாகதுருகம் பேரூராட்சியில் 5 என மொத்தமாக 21 மனுக்கள் பெறப்பட்டது. நகராட்சிகளான கள்ளக்குறிச்சி 12, திருக்கோவிலுார் 9, உளுந்துார்பேட்டை 18 என 39 விண்ணப்பங்களும், மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கு 11 விண்ணப்பமும் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 430 நியமன உறுப்பினர் பதவிக்கு, 861 மனுக்கள் வந்தது. இந்த மனுகளை பரிசீலினை செய்வதற்காக கலெக்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊராட்சிகள் உதவி இயக்குநர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகி ஆகிய 5 நபர்களை உள்ளடக்கி குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் 40 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளாரா எனவும், 21 வயது பூர்த்தியானவர், மாற்றுத்திறனாளி சான்று, வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரர் பெயர், ஊராட்சிகளில் வரி நிலுவை தொகை விபரம், சம்மந்தப்பட்ட ஊராட்சியில் வசிப்பதற்கான ஆதாரம் உட்பட பல்வேறு விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வு பணிகள் முடிந்ததும் கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி, தேர்வு செய்யப்பட்ட நபர்களின் விபரம் தெரிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை