நுாறு நாள் வேலையில் அரசு விழாவும் வந்தாச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமீப காலங்களாக அரசு விழாக்களுக்கு மக்கள் வருகை குறைந்துள்ளதால், ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், அரசு விழாக்களுக்கு மக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டியது, அந்த பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலையாய பணியாக உள்ளது.இதனால், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு விழாக்களுக்கு மக்கள் கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை அழைத்து வருகின்றனர். என்ன நிகழ்ச்சி, யார் வருகிறார், என்ன நலத்திட்டங்கள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து எதுவும் தெரியாத கிராமப்புற மக்கள், வேலை செய்யாமல் ஊதியம் கிடைப்பதால் திரளாக சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில் பங்கேற்றவர்களை, நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று வேலை செய்ததாக கணக்கு காண்பித்து ஊதியமும் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு கடிவாளம் போடப்போவது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.