உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனிப்பிரிவு காவலர் நியமிக்க நடவடிக்கை தேவை

தனிப்பிரிவு காவலர் நியமிக்க நடவடிக்கை தேவை

ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலர் நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களிலும் தனிப்பிரிவு போலீசார் பணிபுரிபவர். சீருடை அணியாத தனிப்பிரிவு போலீசார், தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்வு, புதிதாக போடப்படும் வழக்கு, விபத்து, திருட்டு, போராட்டம் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்த தகவலை சேகரித்து, எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவுக்கு தெரிவிப்பார்.குறிப்பாக, முக்கிய நிகழ்வுகள், அசம்பாவிதங்கள் குறித்த தகவலை எஸ்.பி.,யிடம் நேரடியாக தெரிவிப்பது தனிப்பிரிவு காவலர்களின் பணியாகும். ஒரு சில குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில், தனிப்பிரிவு காவலர்களின் பங்கு முக்கியமாக இருக்கும்.வாணாபுரம் பகண்டைகூட்ரோடு காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்த சந்தோஷ், கடந்த ஏப்ரல் 30ம் தேதி வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு போலீசார் நியமிக்கப்படவில்லை. மாறாக, திருப்பாலபந்தலில் பணிபுரியும் விஜய், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.வாணாபுரம் பகண்டைகூட்ரோடு காவல் நிலையத்தில் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, வாணாபுரத் தில் தாலுகா, பி.டி.ஓ., மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகங்கள், வங்கிகள், அனைத்து கட்சி அலுவலகங்கள், வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.கட்சி சார்ந்த ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் வாணாபுரத்தில் நடைபெறும். சமீப காலமாக வாணாபுரத்தை சுற்றியுள்ள பகுதியில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே, பகண்டைகூட்ரோடு காவல் நிலையத்திற்கு தனிப்பிரிவு காவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை