வேளாண் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் தொழில் முனைவோர் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில், தொழில் முனைவோர்களுக்கு வணிகம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரும், 22ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.இதில் தொழில் முனைவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வணிகப்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படுகிறது. உற்பத்தி வேளாண் விளைபொருட்களை தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல், சிப்பம் கட்டுதல், பிராண்டிங், மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதியை சிறப்பாகவும், லாபகரமாகவும் செய்து வணிக செயல்பாடுகளை மேம்படுத்த வல்லுநர்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள், கல்வராயன்மலை விவசாய உற்பத்தி குழுக்கள், உற்பத்தி நிறுவனங்கள், இயற்கை விவசாயிகள் உள்ளிட்ட, தொழில் முனைவோர் நிலையில் உள்ள அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களை 9385890420 என்ற எண்ணிலும் கலெக்டரிடரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் அறியலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.