அரசு பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரம்; உளுந்துார்பேட்டை அருகே மாணவர்கள் மறியல்
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டையிலிருந்து திருவெண்ணெய்நல்லுாருக்கு தடம் எண்.11 மற்றும் தடம் எண். 2 அரசு பஸ்கள் பாண்டூர் கிராமம் வழியாக சென்று வருகிறது. அதேபோல் உளுந்துார்பேட்டையில் இருந்து பாண்டூர் வழியாக கிளாப்பாளையம் பகுதிக்கு தடம் எண்.3, உளுந்துார்பேட்டையில் இருந்து பாண்டூர் வழியாக அத்திப்பாக்கம் பகுதிக்கு தடம் எண்.16, உளுந்துார்பேட்டையில் இருந்து பாண்டூர் வழியாக நத்தாமூர் பகுதிக்கு தடம் எண்.1 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு பஸ்கள் பாண்டூர் பகுதியில் நிற்காமல் செல்கின்றன. இதனால் பள்ளி நேரத்தில் மாணவ, மாணவியர் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 8:20 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்வதற்காக மாணவ, மாணவியர்கள் அரசு பஸ்சுகாக காத்திருந்தனர்.அப்போது உளுந்துார்பேட்டையில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் நோக்கிச் சென்ற அரசு பஸ் நிறுத்தாமல் சென்றது.இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவியர்கள் 8:30 மணியளவில் பாண்டூரில் உளுந்துார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 8:45 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.