அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 4 நாட்களில் வர்த்தகம் ரூ.9.29 கோடி!
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு வரும் விவசாய விளைபொருட்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வருவது அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி ஆகும். தற்போது நெல், உளுந்து உள்ளிட்ட விளைபொருட்கள் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தினசரி நெல் 4,000 மூட்டைகள், உளுந்து 2,000 மூட்டைகள் என விளை பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், வியாபாரிகள், விவசாயிகள், கமிட்டி நிர்வாகம் ஒருங்கிணைந்து இதனை சமாளிக்கும் வகையில் தினசரி 1100 லட்டு மட்டுமே வழங்குவது என முடிவு செய்து, குறிப்பிட்ட அளவு விளை பொருட்கள் மட்டுமே ஏலத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.இதன் காரணமாக விளை பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதில்லை. மேலும், வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளை பொருட்களை சாக்கு மாற்றி வெளியில் எடுத்துச் செல்வதற்கும் வசதி ஏற்பட்டுள்ளது.மேலும், கமிட்டி நிர்வாகமும் ஏலத்தை இறுதி செய்வது, பணம் வழங்குவது உள்ளிட்ட இ-நாம் செயலியை சிறப்பாக செயல்படுத்த முடிகிறது.இது குறித்து கமிட்டி மேற்பார்வையாளர் சுரேஷ் ராஜன் கூறுகையில், 'ஏல முறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு இருப்பதால், இ-நாம் திட்டத்தின் கீழ் லாட் வழங்கும் போது, விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்படும் நிலையில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை காலை 7:00 மணிக்குள்ளாக கொண்டு வந்து, லாட் பெற்றுக் கொள்ள வேண்டும்.குறிப்பாக ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகலை கொடுத்தால் மட்டுமே லாட் வழங்கப்படும். காலை 7:00 மணிக்கு மேல் வரும் விவசாயிகள் அடுத்த நாள் ஏலத்தில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடந்த 4 நாட்களில் மட்டும் 2142.90 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் 9.29 கோடி ரூபாய் வர்த்தகமாகியுள்ளது' என்றார். திருக்கோவிலுார் மற்றும் அரகண்டநல்லுார் நெல், வேர்க்கடலை மற்றும் அரிசி வியாபாரிகள் சங்க பொருளாளர் கென்னடி கூறுகையில், 'ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில லட்சங்களில் வர்த்தகமாகும் கமிட்டிகளில் நிரந்தர கண்காணிப்பாளர்கள் இருக்கும் நிலையில், கோடிக்கணக்கில் வர்த்தகமாகும் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. இதனால் கமிட்டியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிரந்தர கண்காணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.