லாரி டிரைவர்களிடம் பணம் வசூலிக்கும் கும்பல் யார்? கனிமவளத்துறை கப் சிப்... வாய் திறக்காத வருவாய்த் துறை
ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வருவாய்த் துறையில், சம்மந்தப்பட்ட ஏரி, பயன்பெறும் நிலத்தின் பரப்பளவு குறித்த விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும்.அனுமதி பெற்ற பின் பொதுப்பணித்துறை அல்லது ஒன்றிய நிர்வாகம் என ஏரி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்களிடம் நேரடியாகச் சென்று வண்டல் மண் எடுக்கும் வாகனத்தின் எண்ணுடன் கூடிய ட்ரிப் ஷீட் பெற வேண்டும். இதுதான் விதிமுறை. இவ்வாறு அனுமதி பெற்ற விவசாயிகள் ஏரியில் ஆழமாக மண் எடுக்காமல் பரவலாக வேண்டும் என்பது விதிமுறை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் யாரும் அவ்வளவு எளிதில் விண்ணப்பித்து அனுமதி பெற்று விட முடியாது.ஒவ்வொரு ஏரியாவிலும் அதிகார பலம் மிக்க அரசியல்வாதிகள் லாரி, ஜே.சி.பி., வைத்துக் கொண்டு, விவசாயி என்ற பெயரில் போலி ஆவணங்களை வைத்து அவர்கள் மட்டுமே வண்டல் மண் என்ற பெயரில் பல மீட்டர் ஆழத்திற்கு கிராவல் மண்ணைத் தோண்டி செங்கல் சூளை, கட்டுமானப் பணிக்கென விற்பனை செய்கின்றனர்.தமிழகம் முழுதும் கிராவல் மண் எடுக்க நாங்கள்தான் அனுமதி பெற்று இருக்கிறோம், எங்களுக்கு ஒரு லாரிக்கு 600 ரூபாய் கொடுக்க விட வேண்டும் என ஆட்களை நிறுத்தி ஒரு சில குரூப் பெயர்களைக் கூறி, எந்த ரசீதும் இல்லாமல் லாரியின் எண்ணிக்கைக்கு ஏற்ப வசூல் வேட்டை அரங்கேறுகிறது.முறையற்ற முறையில் அனுமதி பெற்று மண் எடுப்பதால், முறையாக அனுமதி பெற்றுதானே மண் எடுத்துச் செல்கிறோம், எதற்காக பணம் கொடுக்க வேண்டும் என கேள்வி கேட்பதில்லை. போலீசார் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து லாரியை சோதனை செய்தால் அவர்களிடம் பேசுவதற்கு, குரூப்களில் இருந்து யாரும் முன்வருவதில்லை. நாங்கள் கனிமவளத்துறை அதிகாரிகளை மட்டுமே கவனித்துக் கொள்வோம், அவர்களிடம் இருந்து உங்களுக்கு தொந்தரவு வந்தால் கூறுங்கள் என லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் கூறி நழுவி விடுகின்றனர்.நாங்கள்தான் கிராவல் மண் எடுக்க தமிழகம் முழுதும் பர்மிட் வாங்கி வைத்திருக்கிறோம் எனக் கூறும் இந்த குரூப் யார்? அப்படி உண்மையிலேயே இவர்களுக்கு பர்மிட் கொடுக்கப்பட்டிருக்கிறதா? டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது போல் இவர்களும் முறையற்ற வகையில் வசூல் செய்கிறார்களா? அப்பட்டமாக அரங்கேறும் மண் கடத்தல் கொள்ளையைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கை தான் என்ன என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.குவாரிகளில் சோதனை என்ற பெயரில் ஒரு கும்பல் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு பணம் கேட்டு வரும் கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவியுங்கள் என கனிமவளத் துறை சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது.அப்படி இருக்க அவர்களைப் பற்றிய தகவலை ஏன் போலீசாருக்கு தெரிவிப்பதில்லை? நாமே சட்டத்துக்கு புறம்பாக மண் எடுக்கின்றோம் எதற்கு சிக்கல் என நினைப்பதாலா என தெரியவில்லை.மண் கொள்ளையால் குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல ஏரிகளில், பல மீட்டர் ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு வருவது இயற்கையை சீரழிக்கும் செயலாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.இதற்கு உதாரணம் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவனூர் ஏரியில் பல மீட்டர் ஆழத்திற்கு கிணறு போல் தோண்டி மண் எடுக்கப்பட்டிருப்பது. இனியாவது கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விழிப்பார்களா என்பது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.