பைக் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதல் ; 3 பேர் காயம்
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தென்பெண்ணையாறு உயர்மட்ட பாலத்தில் பைக், ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் காயமடைந்தனர். திருக்கோவிலுார் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சந்துரு, 19; தனது ஸ்கூட்டரில் நண்பர் இளங்கோவன் மகன் ஆகாஷ், 18; பின்னால் அமர்ந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் வாங்க திருக்கோவிலுார் புறப்பட்டனர். தென்பெண்ணை ஆற்றின் உயர்மட்ட பாலத்தில் சென்றபோது, ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் தரணிதரன், 24; ஓட்டி வந்த பைக் ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது. ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த ஆகாஷ் பாலத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டு, 40 அடி பள்ளம் உள்ள ஆற்றில் விழுந்தார். இவ்விபத்தில் ஆகாஷ் வெளி காயம் ஏதுமின்றி உயிர் பிழைத்தார். பலத்த காயம் அடைந்த தரணிதரன், சந்துரு ஆகியோர் மற்றும் ஆற்றில் விழுந்த ஆகாஷ் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு திருக்கோவிலுார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூவரும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.