பைக்குகள் மோதல்: சிறுவன் பலி
திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் தினேஷ்,17; இவர் திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது உறவினரான கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான டி.என்.32 எப்.5092 பஜாஜ் டிஸ்கவர் பைக்கை வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நண்பர்கள் இருவருடன் ஆசனூர் சாலையில் வென்மார் அருகே சென்றபோது, எதிரில் அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மகன் சுரேஷ், 25; வடமலையனூரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மணிகண்டன், 27; ஆகியோர் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது. அதில், இரு பைக்கில் வந்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.அவர்களில், தினேஷ் அவரது நண்பர்கள் காளி மகன் திருமலை,17; கலிவரதன் மகன் சந்தோஷ்,17; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, தினேஷ் இறந்தார்.திருமலை சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், சந்தோஷ் வேலூர் அரசு மருத்துவமனையிலும், சுரேஷ் மற்றும் மணிகண்டன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து தினேஷின் தந்தை வேளாங்கண்ணி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.