உளுந்துார்பேட்டை அருகே கார் தீப்பற்றி எரிந்து சேதம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஸ்ரீதர், 42; இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வீடு புதுமனை புகுவிழா பத்திரிகையை உளுந்துார்பேட்டை முனீஸ்வரன் கோவிலில் வைத்து பூஜை செய்வதிற்காக, குடும்பத்துடன் டொயோட்டா எட்டியாஸ் வாடகை காரில் வந்தார். காரை மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிதிஷ் பாபு, 24; ஓட்டி வந்தார். நேற்று மாலை 5.45 மணிக்கு, உளுந்துார்பேட்டை முனீஸ்வரன் கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றனர். அப்போது கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடங்களில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. காரிலிருந்த வைத்திருந்த துணிகள், பத்திரிகைகளும் எரிந்தது. இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.